பயங்கரவாதத்தை தன் நாட்டில் ஒழிக்க முடியாவிட்டால், பாகிஸ்தான் இந்திய ராணுவத்திடம் உதவி கேட்கலாம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உத்தரகண்ட் டேராடூனில் நடைபெற்ற ‘தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்’ மாநாட்டில் அவர் பேசியதாவது, கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தேசிய பாதுகாப்பு துறையில் முற்றிலும் புதிய அணுகுமுறை எடுத்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பும் பல்வேறு மாற்றங்களை சந்தித்தது. குறிப்பாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகள் உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு மாநிலம் அமைதியுடன் வளர்ச்சி பாதையில் சென்றுள்ளது.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எவ்வளவுமுயற்சி செய்தாலும், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியை தடுப்பது சாத்தியமில்லை. இந்த வளர்ச்சிக்கு உதம்பூர்-ஸ்ரீநகர் ரயில் சேவை சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்திய ராணுவம் பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி வழங்கியுள்ளது.
அவர்களின் செயல் (கர்மா) பார்த்து பதிலடி கொடுத்தோம், தர்மாவைக் கேட்கவில்லை. பஹல்காமில் நடந்த தாக்குதல் போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க வேண்டும். அரசு மட்டுமல்லாமல் பொதுமக்களும் இதற்கு விழிப்பாக இருக்க வேண்டும். பயங்கரவாதம் மனித நேயத்திற்கு அச்சுறுத்தல் மட்டுமல்ல, அமைதி மற்றும் வளர்ச்சிக்கு எதிராகும்.
இந்த போராட்டம் பாதுகாப்பு மட்டுமல்ல, மனித நேயத்திற்கும் முக்கியம். பயங்கரவாதம் ஒரு தொற்று, அதற்கு நிரந்தர தீர்வு தேவை. பயங்கரவாதிகள் மதம், கொள்கை இல்லாதவர்கள், ரத்தக்கறையுடன் சாதிக்க முடியாது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றாலும், இந்தியா ஜனநாயகத்தின் தாயாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் நாடாக மாறியுள்ளது.
பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு நிதியுதவி செய்வது அவர்களுக்கு வலுவாக ஆதரவு தருவது தான். உலக அமைதி வளர்ச்சிக்கு பயங்கரவாதத்தை முற்றிலும்கூட ஒழிக்க வேண்டும். இதற்காக பாகிஸ்தான் உள்ளகத்தில் அழுத்தம் உருவாக்கப்பட வேண்டும். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிறைவடையவில்லை; இது ஒரு எச்சரிக்கை மட்டுமே. பாகிஸ்தான் மீண்டும் தவறு செய்தால் பதில் கடுமையாக இருக்கும்.