இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்ற சூழ்நிலையின் பின்னணியில், பாகிஸ்தானின் முக்கிய நகர பகுதிகளில் உயர்ந்த கம்பங்களின் உச்சியில் அபாய சைரன் கருவிகள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற இந்துக்கள் படுகொலைக்கு இந்தியா கடும் பதிலடி எடுக்கக்கூடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டு வருகிறது.

இந்த அச்ச நிலை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஹசீம் முனீர், இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்கத் தயார் என அறிவித்துள்ளார். எனினும், பாகிஸ்தான் ராணுவத்தில் ராஜினாமாக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது, அந்த நாட்டின் உள்நிலை வலிமை குறைந்துள்ளதைக் காட்டுகிறது.
இதேவேளை, இந்திய எல்லைக்கு அருகிலுள்ள தில்லா பீல்ட் பயரிங் ரேஞ்சில் பாகிஸ்தான் ராணுவம் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. விமானப்படை மற்றும் கடற்படையும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. தில்லா தளத்திற்கு நேரில் சென்று அசிம் முனீர், தனது ராணுவத்தை தேசத்தின் பாதுகாப்புக்கான சின்னமாக புகழ்ந்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாநில அரசு, பெஷாவர், அபோட்டாபாத் உள்ளிட்ட 29 மாவட்டங்களில், ஏர் சைரன் கருவிகளை பொருத்த உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, எதிர்பாராத முறையில் ஏற்படக்கூடிய இந்திய ராணுவ தாக்குதல்களால் பொதுமக்களை முன்னே எச்சரிக்கச் செய்யும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.
பஜளர் பகுதியில் ஏற்கனவே ஏர் சைரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய எல்லைக்குச் சுமார் 500 கி.மீ. தூரத்திலும், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளிலும் இவை நிறுவப்பட்டுள்ளன. இது, இந்திய தாக்குதலுக்கான சாத்தியம் குறித்து பாகிஸ்தானில் நிலவும் தீவிரமான அச்சத்தை வெளிப்படுத்துகிறது.
பாகிஸ்தான் இந்த சைரன்களை நிறுவுவது, இந்தியா ஆப்கானிஸ்தானின் இரகசிய ஆதரவுடன் ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தக்கூடும் என்ற ஐயத்தில் மேற்கொள்ளப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எந்த நேரத்திலும் துல்லியமான ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று பாகிஸ்தான் அஞ்சுகிறது.
இது மட்டும் இல்லாமல், பாகிஸ்தானில் நடைபெறும் தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்களும், அந்த நாட்டின் ராணுவத்தில் நம்பிக்கை குறைவடையும் சூழலையும் உருவாக்கியுள்ளது. ராணுவ வீரர்களும் போலீசாரும் பயங்கரவாதிகள் இலக்காகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த சூழலில், பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யும் முனைப்புடன் ஏர் சைரன் அமைப்புகளை அமல்படுத்தி வருகின்றன. இது பாகிஸ்தான் அரசாங்கத்தின் பயத்தையும், எதிர்பாராத தாக்குதல்களுக்கு தயாராக இருக்கவேண்டும் என்ற அவசர மனநிலையையும் வெளிப்படுத்துகிறது.
இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் எவ்வாறு எதிர்நோக்கப் போகிறது என்பது வரவிருக்கும் நாட்களில் தெளிவாகும். ஆனால் தற்போது, பாக்., மக்களுக்கு போர் என்ற வார்த்தையே பெரும் அதிர்ச்சியாக மாறியுள்ளது.