மும்பை: நள்ளிரவு 1 மணி முதல் 7 மணி வரையிலான 6 மணி நேரத்தில் 300 மிமீ கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை முதல் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நள்ளிரவு 1 மணி முதல் 7 மணி வரை 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்க்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மும்பையின் தானே பகுதி கடந்த சனிக்கிழமை முதல் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், மழைநீர் கால்வாய்கள் நிரம்பி, நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வரும் 10ம் தேதி வரை மழை நீடிக்கும். மராத்வாடா பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் கேரளாவிலும் இன்று (ஜூலை 8) கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.