அமராவதி: சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மக்களுடன் இணைந்து ஆர்.கே. கடற்கரையில் யோகா செய்த பின்னர் அவர் உரையாற்றினார். யோகா உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன், உலக அமைதிக்கும் வழிகாட்டியாக இருப்பதை அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் நடந்தன. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மோடி உரையில், யோகா உலக மக்களையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக இருப்பதாகவும், மனிதர்கள் இயற்கையின் ஒரு பகுதியாக இருப்பதை யோகா நினைவூட்டுகிறது என்றும் தெரிவித்தார். மேலும், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்தார்.
யோகா குறித்து உலகின் மிகப்பெரிய மருத்துவ நிறுவனங்களும் ஆராய்ச்சி செய்து வருவதாகவும், நாட்டின் எல்லா பகுதியில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். 175 நாடுகள் சர்வதேச யோகா தினத்தை ஆதரித்து இருக்கின்றன என்பது பெருமைக்குரியது என்று கூறினார்.
மனதையும் உடலையும் கட்டுப்படுத்தும் ஒரு சக்தியாக யோகாவை பாராட்டிய அவர், இது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். எண்ணெய் போன்றவற்றின் அதிகப்படியான உபயோகத்தைக் குறைக்கும் வாழ்க்கை முறையை யோகா ஊக்குவிக்கிறது என்றும் கூறினார்.
மன்கி பாத் நிகழ்ச்சியிலும் அவர் உடல் பருமன் குறித்தும், ஆரோக்கிய உணவுமுறைகளும் குறித்து மக்களிடம் உரையாற்றியுள்ளார். இப்போது யோகா மனித வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது என்பதை அவர் பெருமையாக சொன்னார்.
உலக அமைதிக்காக யோகா ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் இந்தியா முன்னோடியாக செயல்படுகிறது. யோகா தேசிய எல்லைகளை கடந்த மனிதநேயம் மிக்க ஒரு பாலமாக விளங்குகிறது.
மோடி உரையின் இறுதியில், யோகா மீது மக்களின் விழிப்புணர்வு மேலும் வளரட்டும் என்றும், ஆந்திர மக்களுக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்தார்.