திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் திருமலையில் மது, இறைச்சி, புகையிலை, குட்கா போன்றவற்றை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அலிபிரி டோல்கேட்டில் பக்தர்களின் உடமைகள் முழு ஆய்வுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, திருமலை ராம்பகிஜா பஸ் நிலைய வளாகத்தில், தமிழக பக்தர்கள் சிலர், வேகவைத்த கோழி முட்டை மற்றும் வெஜ் புலாவ் சாப்பிட்டு கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பக்தர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பக்தர்களின் உணவை பறிமுதல் செய்தனர். திருமலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பக்தர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். தடை செய்யப்பட்ட உணவு எப்படி சோதனைச் சாவடியைத் தாண்டி திருமலைக்குள் வந்தது என்று சக பக்தர்கள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.