புதுடெல்லி: நான்கு மாநிலங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து, கடந்த 7-ம் தேதி நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அன்றைய தினமே பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.
போர் ஒத்திகையின்போது எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை எப்படி செய்வது, சைரன் ஒலி எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்வது போன்ற செயல்முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன.
இதற்கிடையே, பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களான குஜராத், பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை வியாழக்கிழமை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்தப் போர்க்கால ஒத்திகையின்போது கட்டுப்பாட்டு அறை, வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பாடுகள் குறித்து சோதனை நடத்தப்பட உள்ளது. மக்களை எச்சரிக்கும் வகையிலான சைரன் ஒலி, தீயணைப்பு, மீட்புக்குழுவினரின் செயல்பாடுகள், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது உள்ளிட்டவை குறித்து ஒத்திகை நடத்தப்படும்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தலின்படி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடைபெற இருந்த போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 3-ம் தேதி போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்துள்ளது.