பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சனிக்கிழமை காலை இலங்கையின் தலைநகர் கொழும்பு சென்றடைந்தார். அவருக்கு கொழும்பில் மிக பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பின் ஒரு பகுதியாக, கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு இலங்கை அரசு நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘மித்ர விபூஷண’ பதக்கம் வழங்கியுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பு, ஒத்துழைப்பு மற்றும் வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி ஆற்றிய தனித்துவமான பங்களிப்பிற்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, விருதை வழங்கி பேசும்போது, “இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு அண்டை நாடுகள் என்ற அடிப்படையில் மட்டுமின்றி, வரலாறு, மதம் மற்றும் கலாச்சாரத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. நமது இருதரப்பு உறவுகள் காலங்கள் கடந்து நிற்கின்றன. இந்த உறவு பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது” என்று கூறினார்.
பிரதமர் மோடி, ‘மித்ர விபூஷண’ விருதைப் பெற்றதற்கு தனது நன்றியைத் தெரிவித்தார். இது தனக்குக் கிடைத்த தனிப்பட்ட மரியாதை மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்திருக்கும் மரியாதை என்று அவர் கூறினார். “இந்த விருது எனக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். இந்த மரியாதை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று உறவு மற்றும் ஆழமான நட்பின் அடையாளமாகும். இந்த பாசம் மற்றும் மரியாதைக்காக இலங்கை அதிபர் அனுர குமார் திசாநாயக்க, இலங்கை அரசு மற்றும் இங்குள்ள மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.