பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 4 நாள் அரசுமுறை பயணமாக கனடா மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்குச் செல்கிறார். இந்த பயணத்தின் முக்கியக் காரணமாக ஜூன் 16 மற்றும் 17 தேதிகளில் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதைக் கூறலாம். உலகின் முன்னணி 7 தொழில்துறை நாடுகள் உள்ளடங்கிய இந்த அமைப்பின் கூட்டத்தில், பல்வேறு முக்கிய உலக பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

ஜி7 மாநாடு, அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு குறித்து உறுப்பினர்கள் ஒருவருடன் ஒருவர் ஆலோசனை நடத்தும் மேடையாக உள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின்பேரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அவர் இப்பயணத்தின் ஒரு பகுதியாக சைப்ரஸ் நாட்டிற்கும் செல்கிறார், அங்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை.
இந்த மாநாட்டில் எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் மோடி, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த சந்திப்புகள் உலக அரசியல் சூழலைத் தீர்மானிக்கும் விதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சைப்ரஸில், அந்நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியா-சைப்ரஸ் இடையேயான முதலீடு, கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் முயற்சியாக இந்த சந்திப்பு அமைவது உறுதி. முழு பயணமும் இந்தியாவின் உலக ரீதியிலான இடத்தை வலுப்படுத்தும் முக்கியமான முயற்சியாகும்.