புதுடெல்லி: பிரிட்டன் பிரதமராக பதவியேற்றுள்ள கெர் ஸ்டாமருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கெர் ஸ்டாமருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை நினைவு கூர்ந்த இரு தலைவர்களும், இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டனர். இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது.
பிரிட்டனின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பைப் பாராட்டி, மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டன் பிரதமராக பதவியேற்றுள்ள ஜெர் ஸ்டாமருக்கு வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் வளர்ச்சிக்காக பொருளாதார உறவை வலுப்படுத்தவும் முடிவு செய்தோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபருக்கு வாழ்த்துக்கள்:
ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மசூத் பெஷ்கியானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். எங்கள் மக்கள் மற்றும் பிராந்தியத்தின் நலனுக்காக எங்கள் நீண்டகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த நான் எதிர்நோக்குகிறேன்” என்று மோடி பதிவில் கூறினார்.