பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பயணத்தை நிறைவு செய்ததும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டார். டோக்கியோவில் நடைபெற்ற இந்திய–ஜப்பான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர்களையும் சந்தித்து உரையாடினார்.

மோடி தனது பயணத்தின் இரண்டாம் நாளில் ஜப்பானின் 16 மாகாண கவர்னர்களை சந்தித்தார். இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒத்துழைப்பை வலியுறுத்திய அவர், டோக்கியோவிலிருந்து சென்டாய் நகரம் வரை புல்லட் ரயிலில் பயணம் செய்தார். அங்கு உலகப் புகழ்பெற்ற புல்லட் ரயில் தொழிற்சாலையையும் பயிற்சி மையத்தையும் பார்வையிட்டு, இந்தியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செமிகண்டக்டர் தொழிற்சாலையைப் பார்வையிட்டார்.
சமூக வலைதளத்தில் பதிவிட்ட மோடி, செமிகண்டக்டர் துறை இந்தியா–ஜப்பான் உறவில் முக்கிய பங்கு வகிப்பதோடு, பல இளைஞர்கள் இதில் பங்கேற்றிருப்பது பெருமை எனக் குறிப்பிட்டார். உலகப் பொருளாதார சவால்களை சமாளிக்க இந்தியா–சீனா இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். இரு நாடுகளின் உறவு உலக அமைதி மற்றும் செழிப்பில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
அதன்பின் மோடி சீனாவின் தியான்ஜின் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் பிரதமருக்கு அவர் பளிங்குக் கிண்ணம், வெள்ளிக் குச்சிகள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார். அவரது மனைவிக்கு ஜம்மு காஷ்மீரின் பாஷ்மினா சால்வையும் அளித்தார். இப்பரிசுகள் இந்தியக் கலை, பாரம்பரியத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.