புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்துக்கு ராகுல் காந்தி இன்று (ஜூலை 8) செல்ல உள்ள நிலையில், ஜிரிபாம் மாவட்டத்தில் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மைதேய் மற்றும் குகி சோ சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இப்போதும் பலர் முகாம்களில் வாழ்கின்றனர். இந்நிலையில், இன்று (ஜூலை 8) மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி, கலவரம் நடந்த ஜிரிபாம் பகுதியை பார்வையிடுகிறார். அதன்பின், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்திக்கும் அவர், மாநில அரசியல் தலைவர்களையும் சந்திக்கிறார். இந்நிலையில், ஜிரிபாம் மாவட்டத்தில் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், குகி-சோ மற்றும் மைதேய் ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த சிலரின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில், அப்பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், ஆயுதங்களை வைத்திருந்த இருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்து, அவர்களை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கலவரத்திற்கு பிறகு மணிப்பூருக்கு ராகுல் காந்தி செல்வது இது 3வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.