கேரளாவில் கனமழை பெய்து வருவதால் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு கருதி இடுக்கி வண்டி பெரியார் அருகே சத்திரம்- புல்லு மேடு வழியாக சபரிமலை செல்லும் பாரம்பரிய வனப் பாதை கடந்த 2ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டது. கனமழை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக வன விலங்குகளின் நடமாட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், மழை ஓய்ந்து, இயல்பு நிலை திரும்பியதால், இடுக்கி கலெக்டர் விக்னேஷ்வரி உத்தரவின் பேரில், தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக வனத்துறையினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், இன்று (04.12.24) காலை முதல் வனப்பாதை திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் சபரிமலை செல்ல பக்தர்கள் வனப்பாதையை பயன்படுத்தலாம். இந்த வழித்தடத்தில் மதியம் 2 மணி வரை மட்டுமே ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.