மும்பை: மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) காலை பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது மற்றும் மும்பை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், மும்பைக்கு இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக மும்பை நகர் பகுதியில் அடுத்த 3-4 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
விமான சேவை பாதிப்பு: மும்பையில் பெய்து வரும் கனமழைக்கு இடையே மேக மூட்டம் காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கியுள்ளதால் மும்பை விமான நிலைய செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகள்: கடந்த 24 மணி நேரத்தில் மும்பை நகரில் சராசரியாக 93.16 மி.மீ மழை பெய்துள்ளது.
இதனால் செம்பூர், பிடி மெல்லோ ரோடு, ஏபிஎம்சி மார்க்கெட், துர்பே மாப்கோ மார்க்கெட், கிங்ஸ் சர்க்கிள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த இடங்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதேபோல், சாலைகளில் முழங்கால் அளவு மழை நீர் தேங்கியுள்ளதால், மும்பையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
இதனிடையே, தென்மேற்குப் பருவமழையுடன் தொடர்புடைய மேற்குக் காற்று படிப்படியாக வலுவடைந்து வருவதால், வரும் நாட்களில் மும்பை மட்டுமின்றி மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் அடுத்த 4-5 நாட்களுக்கு மழை படிப்படியாக அதிகரிக்கும் என்றும், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.