புதுடெல்லி: அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், இந்திய பங்குச் சந்தை விதிகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, ஹிண்டன்பர்க் நிறுவனத் துக்கு இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியது.
அதில், ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது அறிக்கையை பொதுவெளியில் வெளியிடுவதற்கு முன்பாக கிங்டன் கேபிடல் மேனேஜ்மெண்ட் என்ற முதலீட்டு நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது என்றும் இதைத் தொடர்ந்து அந்நிறுவனம், அதானி குழுமப் பங்குகளை ஷார்ட் செல்லிங் செய்து லாபம் ஈட்டியுள்ளது என்றும் செபி குறிப்பிட்டுள்ளது.
இந்த நோட்டீஸுக்கு ஹிண்டன்பர்க் நிறுவனம் நேற்று அளித்த பதிலில், “அதானி குழும பங்குகள் கோடக் மஹிந்திரா வங்கியின் சர்வதேச பிரிவின் மூலமே ஷார்ட் செல்லிங் செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் கோடக் மஹிந்திராவை பாதுகாக்கும் நோக்கில், தன் நோட்டீஸில் செபி அவ்வங்கியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை” என்று தெரிவித்துள்ளது.