புதுடெல்லி: இயந்திரத்தில் தயாரிக்கப்பட்ட பாலியஸ்டர் தேசியக் கொடிகளை பயன்படுத்த அனுமதித்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து நாளிதழில் அவர் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: காதி துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடி தேசியப் பெருமையின் சின்னம். தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதில் பிரதமர் மோடி இரட்டை நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருளைக் கொண்டு இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலியஸ்டர் கொடிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது அவரது இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இந்திய தேசியக் கொடி வரலாற்று ரீதியாக கையால் நெய்யப்பட்ட காதி துணியால் ஆனது. மேலும், காதி நமது கடந்த கால கலாச்சாரத்தின் சின்னம். இது இந்திய நவீனத்துவம் மற்றும் பொருளாதார உயிர்ச் சின்னம். இந்த நித்திய சின்னங்களுக்கு மதிப்பளித்து, தேசியக் கொடி காதியால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
ஆனால் 2022ம் ஆண்டு நமது சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழாவின் போது மத்திய அரசு இந்த விதியை திருத்தம் செய்தது காதி தொழிலுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலியஸ்டர் தேசியக் கொடிகள் தற்போது பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.
மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டைக் கண்டித்து BIS அங்கீகாரம் பெற்ற நாட்டின் ஒரே தேசியக் கொடி உற்பத்திப் பிரிவான கர்நாடகாவின் ஹுபல்லி மாவட்டத்தில் உள்ள கர்நாடக கதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கம் (KKGSS) காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தள்ளப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல், நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் நமது உள்நாட்டு கைத்தறி தொழில்களை அழித்து வரும் அதே வேளையில், பெரு நிறுவனங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் கோவிட் லாக்டவுன் காரணமாக ஆயிரக்கணக்கான கைத்தறி தொழிலாளர்கள் ஏற்கனவே தங்கள் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர். காந்தியின் காதி சின்னம் அதன் சொந்த தேசத்தில் மதிப்பிழந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. சோனியா கூறினார்.