இன்று நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் ஓட்டுப்பதிவுக்கான விதிமுறைகள் குறித்து, நேற்று எம்.பி.க்களுக்கு மாதிரி ஓட்டுப்பதிவின் மூலம் விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. ராஜ்யசபா செயலகம் இந்த நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. பாராளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் பாதுகாப்பாகவும் எளிதாகவும் செல்ல, சிறப்பு நுழைவு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொபைல் போன்கள் உள்ளிட்ட சாதனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்பதும் எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவு நடைபெறும் அறைகளில் ஒவ்வொரு விவரமும் மிகுந்த கவனத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தனிப்பட்ட இருக்கைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். ரகசிய வாக்குப்பதிவுக்காக தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சக்கர நாற்காலியில் வரும் எம்.பி.க்கள் வசதியாக வாக்களிக்க விசாலமான அறைகள் வைக்கப்பட்டுள்ளன. பழைய பாராளுமன்ற கட்டடத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மண்டபம், இந்த தேர்தலுக்காக சிறப்பாக தயாராக்கப்பட்டுள்ளது.
இண்டி கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு தனித்தனியாக மாதிரி வாக்குப்பதிவு பயிற்சிகள் வழங்கப்பட்டன. தேர்தல் விதிமுறைகள் குறித்து எம்.பி.கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அதிகாரிகள் பதிலளித்தனர். தேர்தல் போது பின்பற்ற வேண்டிய 13 முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தேர்தல் அதிகாரி வழங்கும் பேனாவையே பயன்படுத்த வேண்டும், அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும், ரகசியம் காக்க வேண்டும் போன்றவை அடங்கும். விதிகளை மீறினால் வாக்கு செல்லாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். மொத்தம் 788 எம்.பி.க்கள், அதாவது 233 தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்கள், 12 நியமன எம்.பி.க்கள் மற்றும் 543 லோக்சபா உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கி, நள்ளிரவுக்குள் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ரெட்டி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.