சண்டிகர்: விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் கூறி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
டெல்லி அரசு நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே டெல்லிக்கு பேரணியாக செல்ல முடியும் என்று கூறிய பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில போலீசார், இரு மாநில எல்லையான ஷம்புவில் தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். விவசாயிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் ஷம்பு எல்லையில் இருந்து விவசாயிகள் 3-வது முறையாக டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
சில அடிகள் மட்டுமே சென்ற அவர்களை பல அடுக்கு போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் ஹரியானா மாநிலம் அம்பாள் பகுதியில் உள்ள 12 கிராமங்களில் மொபைல் இணையதளம் மற்றும் எம்எம்எஸ் சேவைக்கு விதிக்கப்பட்ட தடை வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 6 மற்றும் 8-ம் தேதிகளில் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் கனவுரி எல்லையில் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 19-வது நாளை எட்டியது.