புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான ஊழல் புகாரை லோக்பால் அதிகாரிகள் விசாரிக்க அனுமதிக்கும் உத்தரவின் செல்லுபடித்தன்மையை ஆய்வு செய்வதில் நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமாரை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

ஒரு தனிநபருக்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையிலான வழக்கில் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் கூடுதல் நீதிபதி மீது லோக்பாலில் ஊழல் புகார் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான லோக்பால் அமர்வு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பாலுக்கு அதிகாரம் உள்ளது என்று ஜனவரி 27 அன்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், பிப்ரவரி 20 அன்று லோக்பால் உத்தரவுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவு குறித்து ஆழ்ந்த கவலையும் தெரிவித்தது. இது தொடர்பாக நீதிபதிகள் மீது மத்திய அரசுக்கும் புகார்தாரருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட நீதிபதிகளின் பெயர்களை வெளியிடுவதையும் தடை செய்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யகாந்த் மற்றும் அபய் எஸ். ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரர் சார்பாக நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமாரை நீதிபதிகள் நியமித்தனர். இந்த வழக்கில், நீதிமன்றம் லோக்பாலின் அதிகார வரம்பை மட்டுமே ஆராயும் என்றும், குற்றச்சாட்டுகளின் தகுதியை ஆராயாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.