புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் மாணவர்களின் நலன் கருதி பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யும் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில், 2016-ல், 25,000 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் தேர்வில், முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, அவர்களின் நியமனத்தை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.
மேலும் 3 மாதங்களுக்குள் புதிய ஆசிரியர்களை தேர்வு செய்யவும் உத்தரவிட்டது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதால், 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்யும் வரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை பணி தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்கிறோம். புதிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் தொடர முடியும். மாணவர்களின் தேர்வு முடிவுகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முறைகேடு புகார் இல்லாத ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த நிவாரணம் பொருந்தும். புதிய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை மே 31-ம் தேதிக்குள் வெளியிட்டு, டிச., 31-க்குள் தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும்.
இந்த நிபந்தனையை ஏற்று மே 31-க்குள் மாநில அரசும், பள்ளிக் கல்வி ஆணையமும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.மே 31-க்குள் ஆசிரியர் தேர்வுக்கான விளம்பரம் வெளியிடாவிட்டால், உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும். ஆசிரியர் அல்லாத குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு இந்த நிவாரணம் பொருந்தாது. அந்த வகையில் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏராளம். இவ்வாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.