திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தலைமையில் நடை திறக்கப்பட்டது. கோவிலில் முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் ஜனவரி 14-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் இன்று முதல் மகரவிளக்கு பூஜைக்கு மறுநாளான ஜனவரி 15-ம் தேதி வரை அனைத்து ஆன்லைன் முன்பதிவுகளும் முடிந்துள்ளன. இதற்கிடையில், மகரவிளக்கு பூஜையை ஒட்டிய நாட்களில் நெரிசலைத் தவிர்க்க, ஜனவரி 12 முதல் 14 வரை உடனடி முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கான சிறப்பு பாஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன எருமேலி (பிரதான பாதை) மற்றும் புல்மேடு வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு உடனடி தரிசனத்திற்காக சிறப்பு பாஸ்கள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட 5 மடங்கு வரை அதிகரித்துள்ளது. இதனால், ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு செய்த பக்தர்கள், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், எருமேலி மற்றும் புல்மேடு வனப் பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு அனுமதி சீட்டுகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.