லக்னோ; ஹரியானா சட்டசபை தேர்தல் தோல்விக்கு ஜாட் சமூக மக்களின் சாதிவெறியே காரணம் என்று உ.பி. முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார். ஹரியானாவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிய பாஜக, அமோக வெற்றியுடன் 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள்தான் தோல்விக்கு காரணம் என காங்கிரஸ் புகார் கூறுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இந்திய தேசிய லோக்தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
தேர்தல் முடிவில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1.82 சதவீத வாக்குகளும், இந்திய தேசிய லோக் தளம் கட்சிக்கு 4.14 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், ஹரியானா தேர்தல் தோல்விக்கு ஜாட் சமூகத்தின் சாதிவெறியே காரணம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்; இந்திய தேசிய லோக்தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். ஆனால் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு எதிராக உள்ளது.
ஜாட் சமூகத்தின் சாதிய மனநிலையே எங்கள் தோல்விக்கு காரணம். சில தொகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் ஜாட் சமூகத்தினர் தங்கள் சாதி பாகுபாட்டை மாற்றிக்கொண்டனர். அவர்களில் பலர் எங்கள் கட்சியில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஹரியானாவில் உள்ள ஜாட் சமூகத்தினர் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளுமாறு நான் அறிவுறுத்துகிறேன். இதனை மாயாவதி தனது X இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.