புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆறு புதிய மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது. ஜூலை 23-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கிடையே, இந்தக் கூட்டத்தொடரில் ஆறு புதிய மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒன்று பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா. இதேபோல் தற்போது நடைமுறையில் உள்ள விமானச் சட்டம் 1934-ஐ மாற்றும் பாரதிய வாயுயான் விதேயக் 2024 மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள மசோதாக்கள் பட்டியல்:
நிதி மசோதா
பேரிடர் மேலாண்மை மசோதா
கொதிகலன்கள் மசோதா
பாரதிய வாயுயன் விதேயக் மசோதா
காபி மசோதா
ரப்பர் மசோதா
ஆகிய மசோதாக்கள் நடக்கவுள்ள கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்களை தீர்மானிக்கும் அலுவல் ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் பாஜகவைச் சேர்ந்த நிஷிகாந்த் துபே, அனுராக் சிங் தாக்கூர், பர்த்ருஹரி மஹ்தாப், பி.பி. சௌத்ரி, பைஜயந்த் பாண்டா, சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோரும், காங்கிரஸில் இருந்து கே.சுரேஷ், கௌரவ் கோகோய் ஆகியோரும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுதீப் பந்தோபாத்யாய், திமுக சார்பில் தயாநிதி மாறன், சிவசேனா சார்பில் அரவிந்த் சாவந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.