புனே: மரத்தில் இருந்து ‘புனித நீர்’ வருவதாக பக்தர்கள் வழிபாடு நடத்த அதிகாரிகள் விசிட் அடித்துவிட்டு செம ட்விஸ்ட் ஆக தகவலை தெரிவித்து சென்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிம்ப்ரி பகுதியில் உள்ள பிரேம்லோக் பூங்கா அருகே இருக்கும் ஒரு குல்மோகர் மரத்திலிருந்து கடந்த ஜூன் 6-ம் தேதி திடீரென தண்ணீர் ஊற்று போல் வெளியேறத் தொடங்கியது. இந்த மரம், மே-பூ மரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், மரத்திலிருந்து வருவது “புனித நீர்” என்று தவறாகப் புரிந்துகொண்டு, அதை வழிபடத் தொடங்கினர். இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவ, ஏராளமான மக்கள் அங்கு குவியத் தொடங்கினர்.
அவர்கள் மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வழிபட்டனர். சிலர் இந்தத் தண்ணீருக்கு நோய்களைக் குணப்படுத்தும் சக்தி இருப்பதாக நம்பி, அதைத் தீர்த்தம் போல் பருகியதுடன், தங்கள் உடலிலும் தெளித்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்கள் வைரலாகப் பரவிய நிலையில் இது பிம்ப்ரி மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. உடனடியாக விசாரணை நடத்திய அதிகாரிகள், மரத்திலிருந்து தண்ணீர் கசிந்ததற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்தனர். நிலத்தடி நீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாகவே தண்ணீர் கசிந்துள்ளதாகவும், அந்தக் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே மரம் இருந்ததால், மரத்தின் தண்டு வழியாக தண்ணீர் வெளியேறுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.