புதுடில்லி: கடன் வசூல் நிறுவனங்கள் குண்டர்களின் கூடாரமாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்தவர் தேபாசிஷ் போசு ராய் சவுத்ரி. இவர் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், 2014, டிசம்பரில், பஸ் வாங்குவதற்காக 15 லட்சம் ரூபாய் வாகனக் கடன் பெற்றார். கடந்த 2018 ஜனவரியில் இருந்து கடனை செலுத்தவில்லை. இதனால் மே மாதம் அவரது வாகனத்தை, பேங்க் ஆப் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசூல் செய்யும் தனியார் நிறுவனம் பறிமுதல் செய்தது.
இதையடுத்து வங்கியுடன் சமரசம் பேசி, நிலுவை கடன் 10 லட்சத்துக்கு பதில், ஒரு முறை செட்டில்மென்ட் தொகையாக 1.8 லட்சம் ரூபாயை தேபாசிஷ் செலுத்தினார். வங்கி அந்த தொகையை ஏற்று, கடனை முடித்து வைத்தது. அதன்பின் பஸ் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பஸ் ஓடும் நிலையில் இல்லை. அதன் சேசிஸ், இன்ஜின் ஆகியவை மாற்றப்பட்டிருந்தன.
இது குறித்து கோல்கட்டா போலீசில் தேபாசிஷ் புகார் அளித்தார். போலீசார் கடன் வசூல் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து வங்கி மற்றும் கடன் வசூல் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு கூறியதாவது: வங்கி சார்பாக செயல்படும் கடன் வசூல் செய்யும் நிறுவனம், குண்டர்கள் குழுவை போல செயல்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கடன்தாரர்களை துன்புறுத்துகின்றனர்.
ஒரு முறை செட்டில்மென்ட் தொகையை பெற்ற பின்னரும், வாகனத்தை சரியான நிலையில் திருப்பித் தரத் தவறியுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிந்தது சரியே. மேலும், இந்த வழக்கில் கோல்கட்டா போலீசார் இரண்டு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
கடன் வசூல் நிறுவனத்தின் அங்கீகாரத்தை வங்கி ரத்து செய்ய வேண்டும். இழப்பீடு தொகையை அவர்களிடம் இருந்து வசூலித்து கடன் பெற்றவருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.