திருவனந்தபுரம்: சபரிமலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:- மண்டல சீசனில் பக்தர்கள் எளிதாக சபரிமலைக்கு சென்று, சிரமமின்றி திரும்பினர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தரிசனம் செய்ய தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வரிசையில் காத்திருந்தவர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் 80 ஆயிரம் பேரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டாலும், அதை விட அதிகமான பக்தர்கள் வந்தனர். இருப்பினும், அனைவரும் எளிதாக தரிசனம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த மண்டலத்தில் 42 நாட்களில் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பினர்.
கடந்த ஆண்டு மண்டல காலத்தில் 28 லட்சத்து 42 ஆயிரத்து 447 பேர் வந்திருந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சத்து 7 ஆயிரத்து 309 பேர் கூடுதலாக வந்துள்ளனர். இந்த மண்டலத்தின் போது மொத்தம் ₹297.06 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ₹214.82 கோடி பெறப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ₹82.23 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
இந்த முறை அரவணா பிரசாத விற்பனை மூலம் ₹124 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ₹22 கோடி அதிகம். பிரசாதம் மூலம் ₹80.25 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ₹13.28 கோடி அதிகம். இந்த ஆண்டு, உடனடி முன்பதிவு வசதியைப் பயன்படுத்தி, 5,66,571 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 4,22,269 பேர் தரிசனம் செய்தனர். இந்த சீசனில் புல்மேடு வழியாக 74,774 பேர் வந்தனர். கடந்த ஆண்டு இந்த வனப்பாதை வழியாக 69,250 பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.