பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மேற்கொண்ட தாக்குதல், அந்த நாட்டின் தீவிரவாத செயல்பாடுகளுக்கு முடிவுகாட்டும் வகையில் இருந்தது. பாகிஸ்தான், உலக அமைதிக்கு எதிராக செயல்பட்டு, தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம்களாகவும் பாதுகாப்பு மையங்களாகவும் தொடர்ந்து செயல்பட்டது. அந்த பயங்கரவாத முகாம்களில், பஹல்காமில் அப்பாவி மக்களை கொன்ற கொலைகாரர்களுக்கு அடைக்கலம் வழங்கப்பட்டது. இவற்றின் மீது இந்திய ஆயுதப்படைகள் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் முன்பு இல்லாத அளவில் பெரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும், இது பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை தடுக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலின் வெற்றியை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான தலைமையையும், இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சலையும் வலியுறுத்தும் வகையில், இந்த யாத்திரைகள் நடைபெறும்.
மே 14 முதல் 23 ஆம் தேதி வரை, நான்கு கட்டங்களில் இந்த யாத்திரைகள் நடைபெறும். முதலாவது கட்டம் மே 14 அன்று சென்னையில், இரண்டாவது கட்டம் மே 15 அன்று முக்கிய நகரங்களில், மூன்றாவது கட்டம் மே 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் மாவட்ட பேரூர்களில், மற்றும் நான்காவது கட்டம் மே 18 முதல் 23 ஆம் தேதி வரை சட்டமன்றத் தொகுதிகள், பெரிய கிராமங்கள் மற்றும் தாலுகா பகுதிகளில் நடைபெறும்.
இதற்கான வழிகாட்டுதல்கள் மாநில தலைமையிலிருந்து தொடர்ச்சியாக வழங்கப்படும். நம் வீரர்களின் தியாகத்தையும், நாட்டின் வெற்றியையும் கொண்டாடும் இந்த நிகழ்வில், பொதுமக்கள் பெரிய அளவில் பங்கேற்று, தேசிய ஒற்றுமையையும், நாட்டு மக்களின் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்த வேண்டுமென நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.