புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே, நாடு முழுவதும், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மற்றும் பாரதிய சஸ்கத்ய ஆதினியம் (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகியவை இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் உள்ளிட்ட பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்றின.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
புதிய குற்றவியல் சட்டங்கள் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தேசிய குற்றப்பதிவு பணியகம் (என்சிஆர்பி) தற்போதுள்ள குற்றவியல் கண்காணிப்பு அமைப்புகளின் (சிசிடிஎன்எஸ்) பயன்பாட்டில் 23 செயல்பாட்டு புதுப்பிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய வழிமுறைகளுக்கு சுமூகமாக மாறுவதற்கு என்சிஆர்பி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவியையும் வழங்கியுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5,65,746 காவலர்கள், சிறை, தடயவியல் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் உட்பட 5,84,174 அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் 3 புதிய சட்டங்கள் குறித்து 40 லட்சம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய தகவல் மையம் (என்ஐசி) புதிய சட்டங்களின் கீழ் மின்னணு முறையில் சம்மன் நோட்டீஸ்களை டவுன்லோட் செய்வதற்கு வசதியாக e-Sakshiya, Nyayashruti மற்றும் e-Summon ஆகிய 3 பயன்பாடுகளை உருவாக்கியுள்ளது.
நாளை 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி 3 புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சட்டங்களை அவசர கதியில் அமல்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசு நாளை முதல் புதிய சட்டங்களை அமல்படுத்த உள்ளது.
ம.பி. மாநில குவாலியர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., தர்மவீர் சிங் கூறுகையில், ‘ஜூலை 1 முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும், தங்கள் வீட்டில் இருந்தபடியே, இ-எப்ஐஆர் மூலம் புகார் அளிக்கலாம்.
குறிப்பிட்ட காவல் நிலைய எல்லையைப் பொருட்படுத்தாமல், எந்த மாநிலத்திலும் எங்கு வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்.
ஜீரோ எப்ஐஆர் முறையில் புகார் பதிவு செய்யலாம். புகார்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யலாம். விசாரணைக்கான காலக்கெடு குறிப்பிடப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வழிவகுக்கும்.
புதிய சட்டத்தின்படி, 90 நாட்களுக்குள் விசாரணை அதிகாரி பாதிக்கப்பட்டவருக்கு அல்லது புகார்தாரருக்கு வழக்கின் முன்னேற்றம் குறித்து தெரிவிப்பார்.