பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீருக்கு விடுமுறைக்கு சென்ற ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரைகின்றனர். இதேபோல், பலர் தங்கள் உறவினர்களை அழைத்து வர ஸ்ரீநகருக்கு விரைந்து வருகின்றனர். இந்த அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி ஸ்ரீநகருக்கான டிக்கெட் கட்டணத்தை விமான நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீநகருக்குச் செல்லும் விமானங்களுக்கான டிக்கெட் விலை ரூ.65,000-க்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் திரும்பி வர வசதியாக ஸ்ரீநகரில் இருந்து விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) நேற்று விமான நிறுவனங்களை கேட்டுக் கொண்டது.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு நேற்று தனது எக்ஸ் போஸ்டில், “ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4 கூடுதல் விமானங்கள் தவிர, மேலும் 3 விமானங்கள் இன்று டெல்லிக்கு இயக்கப்படுகின்றன. கட்டண உயர்வைத் தவிர்க்க விமான நிறுவனங்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு, நியாயமான விலையை உறுதி செய்ய முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
இதைத் தொடர்ந்து விமான டிக்கெட் விலை படிப்படியாக குறைக்கப்பட்டது. மேலும், அனைத்து விமான நிறுவனங்களும் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கும், மறு அட்டவணைப்படுத்துவதற்கும் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளன.