மும்பை: மும்பையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பார்க்கிங் வசதி இல்லாததால், சிலர் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்துகிறார்கள். இது போக்குவரத்து சிக்கலை மேலும் அதிகரிக்கிறது. மேலும், பாந்த்ரா குர்லா வளாகம், நாரிமன் பாயிண்ட், வோர்லி மற்றும் லோயர் பரேல் உள்ளிட்ட நகரத்தின் முக்கியமான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
பாந்த்ரா குர்லா மற்றும் நாரிமன் பாயிண்ட் உள்ளிட்ட மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதுபோன்ற பகுதிகளில் உள்ள சில வளாகங்களுக்கு ஏராளமான வாகனங்கள் வருகின்றன. இவற்றுக்கு லண்டன் மற்றும் நியூயார்க்கைப் போல நுழைவு கட்டணம் அல்லது நெரிசல் வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய வாகனங்கள் வாங்குபவர்கள் பார்க்கிங் வசதிக்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு குடும்பத்திற்கு ஒரு வாகனம் என்ற கட்டுப்பாட்டை செயல்படுத்துவதும் பரிசீலனையில் உள்ளது. அவர் கூறினார். மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து போக்குவரத்துத் துறை மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது, இது அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளது. இருப்பினும், நெரிசல் வரி அல்லது கட்டணத் திட்டத்தை செயல்படுத்துவதை சிலர் எதிர்த்துள்ளனர். சில பொதுமக்கள் கூறியதாவது:-
குடியிருப்புப் பகுதிகளில் பார்க்கிங் பிரச்சனையை நெரிசல் வரி அல்லது கட்டண வசூல் மூலம் தவிர்க்கலாம். இருப்பினும், வணிகப் பகுதிகளில் இது சாத்தியமில்லை. ஏனெனில் 1990-க்கு முன்பு மும்பையில் கட்டப்பட்ட பெரும்பாலான வணிகக் கட்டிடங்களில் பார்க்கிங் வசதி இல்லை. இதன் காரணமாக, சாலைகளில் வாகனங்களை நிறுத்த வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், மும்பை மாநகராட்சி சாலைகளில் நிறுத்துவதைத் தடை செய்தது. ஆனால் இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது.
15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்கள் தடை செய்யப்பட்டால், நகரத்தில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்று இன்னும் சிலர் கூறினர். அதே நேரத்தில், பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே வாகனம் வாங்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயமாக்கினால், போலி சான்றிதழ்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில், போக்குவரத்துத் துறையின் பரிந்துரையை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பரிசீலித்து, அடுத்த மாதத்தில் பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களைப் பெற்று, பின்னர் நெரிசல் வரி விதிப்பது குறித்து முடிவு செய்வார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.