புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் கர்நாடகாவை சேர்ந்த விஜய் மல்லையா (68). 1978-ல் கிங்பிஷர் மதுபான நிறுவனத்தைத் தொடங்கினார். 2005-ம் ஆண்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. இவை தவிர பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தார். 2011 மற்றும் 2012ல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் பெரும் சரிவை சந்தித்தது. இதனால் கிங்பிஷர் விமான சேவை கடந்த 2012ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்காக இந்திய வங்கிகளில் விஜய் மல்லையா ரூ.9,000 கோடி கடன் பெற்றிருந்தார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடந்த 2016ம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். வங்கி கடன் மோசடி தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் மற்றும் சிபிஐ ஆகியவை பல்வேறு வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்தியாவில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 2019 இல், அவர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
2017 அக்டோபரில், பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை பிரிட்டன் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். சமீபத்தில் இவரது மகன் சித்தார்த்தா மற்றும் ஜாஸ்மின் திருமணம் லண்டனில் நடந்தது. இதில் விஜய் மல்லையா கலந்து கொண்டார்.
இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.180 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கு மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி நாயக் நிம்பல்கர், முக்கிய உத்தரவை பிறப்பித்தார். இந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு ஏற்கனவே பல வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இப்போது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிபதி நாயக் நிம்பல்கர் கூறினார்.