மும்பை: மராத்தா சமூகத்திற்கு ஓபிசி பிரிவின் கீழ் 10% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், மராத்தாக்களை குன்பிகளின் துணை சாதியாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் கோரி, ஆகஸ்ட் 29 முதல் மும்பையின் ஆசாத் மைதானத்தில் மனோஜ் ஜாரங்கி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு ஆதரவாக மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் மும்பைக்கு வந்த ஆதரவாளர்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம், சாலைகள், பூங்காக்கள் மற்றும் பிற இடங்களில் கூடி போராட்டம் நடத்தினர். இதனால் தெற்கு மும்பை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாகவும், வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

நேற்று இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர குகே மற்றும் கவுதம் அங்கத் ஆகியோர் அடங்கிய அமர்வு, போராட்டம் அமைதியான முறையில் நடைபெறவில்லை என்றும், அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “மராத்தா இடஒதுக்கீட்டு ஆர்வலர் மனோஜ் ஜரங்கி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நாளை நண்பகலுக்குள் தெருக்களை காலி செய்து இயல்பு நிலையை மீட்டெடுக்க நீதிமன்றம் வாய்ப்பளிக்கிறது. ஜரங்கி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேவையான அனுமதியைப் பெறாமல் போராட்டத்தை நடத்தவில்லை. எனவே, மகாராஷ்டிரா அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மும்பை காவல்துறை இன்று மனோஜ் ஜரங்கி மற்றும் அவரது குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி, மராத்தா இடஒதுக்கீட்டு போராட்டம் நடைபெறும் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தை உடனடியாக காலி செய்ய வலியுறுத்தினர். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும், போராட்டம் தொடங்குவதற்கு முன்பு கூறப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மும்பை ஆசாத் மைதான காவல்துறை சார்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் ஜரங்கி, “மகாராஷ்டிரா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் வேறுவிதமாக செயல்பட்டால், நான் எந்த அளவிற்கும் செல்ல தயாராக இருக்கிறேன். எனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நான் இங்கிருந்து நகரமாட்டேன். எங்களை கைது செய்யவோ அல்லது வெளியேற்றவோ முயன்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஏழை மராத்தாக்களுக்கு உயர் நீதிமன்றம் நீதி வழங்கும் என்று நம்புகிறேன்.
நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம். 4,000 முதல் 5,000 போராட்டக்காரர்கள் உள்ளனர். நீங்கள் விரும்பினால், எங்களுக்கு தங்க வீடுகள் கொடுங்கள். முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்குகிறார். அதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார்.