பெய்ஜிங்: இந்தியா–சீனா உறவில் பல்வேறு தகராறுகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. அதுவும் எல்லைப் பிரச்சினைகள் அதிகரித்திருக்கும் சூழலில், ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதனால் “இவ்வளவு பிரச்சினைகள் நடுவே சீனா செல்ல வேண்டிய அவசியம் என்ன?” என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற பிராந்திய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அடுத்த பத்தாண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள், பாதுகாப்பு சவால்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.
SCO அமைப்பு முதலில் எல்லைப் பாதுகாப்பு நோக்கில் 1996ல் தொடங்கப்பட்டது. 2001ல் உஸ்பெகிஸ்தான் இணைந்ததும் அதிகாரப்பூர்வமாக உருவானது. இன்று இது உலக மக்கள் தொகையில் பாதியை, உலக வர்த்தகத்தில் 17% பங்கை கொண்ட வலுவான அமைப்பாக வளர்ந்துள்ளது.
இந்தியாவுக்கு SCO முக்கியமானது ஏன் என்றால், மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்தவும், ஆசிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்தவும் இது சிறந்த தளம். குறிப்பாக அமெரிக்கா பரஸ்பர வரி நடவடிக்கைகளை அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவுக்கு மாற்று சந்தைகளை தேட வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் 2017ல் SCOவில் இணைந்தனர். அதன்பின் இந்தியா தனது ஆசிய வர்த்தக, பாதுகாப்பு, ஆற்றல் தேவைகளுக்கான முக்கிய வாய்ப்புகளை இந்த அமைப்பின் மூலம் பெற்றுவருகிறது.
அதனால் தான் எல்லைத் தகராறுகள் இருந்தாலும், SCO உச்சி மாநாடு இந்தியாவுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. அதனால்தான் மோடி சீன பயணத்தைத் தேர்வு செய்துள்ளார்.