புதுடெல்லி: நீண்டகால மூலதன ஆதாய வரியை உயர்த்தியதன் மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களின் நம்பிக்கையை அழித்துள்ளதாக இன்ஃபோசிஸ் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பாய் விமர்சித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், பங்குகள் தொடர்பான குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும், நீண்ட கால மூலதன ஆதாய வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பை மோகன்தாஸ் பாய் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீங்கள் (சீதாராமன்) உங்கள் சிந்தனையற்ற செயலால் மக்களின் நம்பிக்கையை உடைத்து விட்டீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியை டேக் செய்து, “மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மூலதன ஆதாய வரி உயர்வால் நடுத்தர மக்கள் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர். எனவே, அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்” என்றார்.