தாய்ப்பால் உற்பத்தி என்பது குழந்தையின் தேவைக்கேற்ப தாயின் உடலில் இயற்கையாக நடைபெறும் செயல்முறையாகும். ஆனால் சில தாய்மார்களுக்கு தேவையை விட அதிகமாக பால் சுரக்கும் நிலை ஏற்படுகிறது. இதை ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் என்கிறார்கள். இது தாய்க்கும் குழந்தைக்கும் பல சிரமங்களை ஏற்படுத்தக்கூடியது. பிரசவத்திற்குப் பிறகு ஆரம்ப வாரங்களில் பால் அதிகமாக சுரப்பது பொதுவானதாக இருந்தாலும், தொடர்ந்து அதிகப்படியான பால் உற்பத்தி ஏற்பட்டால் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

இந்த நிலையில் தாய்மார்கள் மார்பக வலி, வீக்கம், பால் கசிவு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். மேலும் அடைப்பு, மாஸ்டிடிஸ் எனப்படும் தொற்று, சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற சிக்கல்களும் ஏற்படக்கூடும். குழந்தைகளுக்கும் இது சிரமமாகி விடுகிறது. மிக வேகமாக பால் வெளியேறுவதால் மூச்சுத் திணறல், இருமல், பால் குடிக்கும் போது காற்றை உட்கொள்ளுதல் போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன. இதனால் வாயு, எரிச்சல் மற்றும் செரிமான சிக்கல்கள் அதிகரிக்கின்றன.
அதிகப்படியான பால் உற்பத்திக்கு பல காரணங்கள் உள்ளன. ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், அதிகப்படியான தண்ணீர் குடித்தல் அல்லது அடிக்கடி பம்ப் செய்வது உடலுக்கு தவறான சிக்னல்களை அனுப்பி பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. புரோலாக்டின் ஹார்மோன் அதிகரிப்பதும் இதற்குக் காரணமாகும். நீரேற்றம் அவசியமானதே, ஆனால் தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அதிகமாக தண்ணீர் குடிப்பது பால் உற்பத்தியை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளது.
இதனை கட்டுப்படுத்த சில வழிகள் உதவியாக இருக்கும். ஒரே பக்க மார்பகத்தில் தொடர்ந்து சில நிமிடங்கள் பால் கொடுத்தால், மறுபக்கம் உற்பத்தி குறையும். பால் கொடுக்கும் போது சாய்ந்து அமர்ந்தால் பால் ஓட்டம் மெதுவாகி குழந்தைக்கு சிரமமின்றி குடிக்க உதவும். பால் கொடுக்கும் முன் சிறிது பம்ப் செய்து அழுத்தத்தை குறைப்பது நல்லது. சூடான ஒத்தடம் மார்பகங்களை மென்மையாக்கி, அசௌகரியத்தை குறைக்கும். இவ்வாறு கவனித்தால் தாய்ப்பாலும், குழந்தையின் ஆரோக்கியமும் சமநிலையுடன் இருக்கும்.