சென்னை: தலைமுடி உதிர ஆரம்பிக்கும் ஆரம்ப காலத்திலேயே முடியின் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும். தற்போது தலைமுடி உதிர்வைத் தடுக்கும் பல எண்ணெய்கள் மார்கெட்டுகளில் கிடைக்கின்றன.
ஆனால் அந்த எண்ணெய்களை மட்டும் பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது குறைந்துவிடாது.
தலைமுடியின் ஆரோக்கியம் மற்றும் வலிமை மேம்பட அதற்கான சில உணவுகளும் அவசியம். அத்துடன் இந்த இயற்கை குறிப்பும் முடி வளர்ச்சியை தூண்டும்.
உருளைக்கிழங்கில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு கப் உருளைக்கிழங்கு சாற்றின் மூலம், உடலில் இழந்த வைட்டமின் சி சத்தை உடனே ஈடு செய்திடலாம். வைட்டமின் சி சத்தானது உடலில் இரும்பு சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கூந்தல் வளர்ச்சிக்கு இரும்புச்சத்து மிகவும் தேவையான ஒன்று.
அதனால் தான் கூந்தல் வளர்ச்சிக்கு உருளைக்கிழங்கு பெரிதும் பயனளிக்கிறது.
உருளைக்கிழங்கு சாறு தயாரித்தல்: முதலில் 2 அல்லது 3 உருளைக்கிழங்குகளை நன்கு கழுவி எடுத்துக் கொண்டு தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.
தோல் சீவிய உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். வேண்டுமென்றால், உருளைக்கிழங்கை அரைக்காமல், துருவியும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அரைத்த உருளைக்கிழங்கு அல்லது துருவிய உருளைக்கிழங்கை ஒரு சுத்தமான துணியில் போட்டு ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளவும்.
இப்போது அந்த துணியில் உள்ள உருளைக்கிழங்கை பிழிந்து சாறு எடுக்கவும்.பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள், உருளைக்கிழங்கு சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தவும்.