சென்னை: உப்பு மற்றும் சர்க்கரை ஸ்கிரப்களில் சருமத்தின் தன்மைக்கேற்பவும், ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும் வகையிலான ‘ஸ்கிரப்’ பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் நன்மையை பெறலாம்.
வெப்பம் காரணமாக வியர்வை அதிகமாக வெளியேறும். இதில் தூசுகள் மற்றும் இறந்த செல்கள் படிவதால் சருமத் துளைகள் அடைத்துக்கொள்ளும். இதனால் சருமம் பொலிவு இழந்து கருத்துப்போகும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஸ்கிரப்பிங் முறை உதவும். பல வகை ஸ்கிரப்கள் இருந்தாலும், சருமத்தை பளிச்சென வைப்பதற்கு வீட்டிலேயே நாம் செய்யக்கூடிய ‘சர்க்கரை மற்றும் உப்பு கொண்டு தயார் செய்யும் ஸ்கிரப்’ உதவும்.
சர்க்கரை ஸ்கிரப்: சர்க்கரை ஸ்கிரப் சருமம் வறண்டு போவதைத் தடுக்கும். சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தரும். கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, இளமையான தோற்றத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டது. பயன்படுத்தும் முறை: சர்க்கரையை, அழகுக்காக பயன்படுத்தும் எந்த வகையான எசன்ஷியல் எண்ணெய்யுடனும் கலந்து பயன்படுத்தலாம்.
காபித் தூளுடன் கலந்து பயன்படுத்த ஏற்றது. பாதாம் எண்ணெய்யுடன் சர்க்கரை கலந்து பயன்படுத்தும்போது கூடுதல் பலன்களைப் பெற முடியும். அதேசமயம், சர்க்கரை ஸ்கிரப் முகத்திற்கு மட்டுமே பயன்படுத்த ஏற்றது.
உப்பு ஸ்கிரப்: உடம்பு வலியால் தவிப்பவர்கள், குளிக்கும் வெந்நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிக்கும்போது வலி நீங்கி, உடல் புத்துணர்வு பெறும். இந்த உப்பு ஸ்கிரப்பிங்கை, முகத்திற்கு மட்டுமின்றி உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயன்படுத்தலாம். உப்பு ஸ்கிரப் வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை மீட்டு தருவதுடன், இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டது.
இதனால், சருமம் வழுவழுப்பாக மாறும். உடலில், உப்பு ஸ்கிரப்பைப் பயன்படுத்தும் போது, சருமத்தில் ரத்த ஓட்டம் சீராகும். உப்பை காபித் தூளுடன் கலந்து உடலில் ஸ்கிரப்பாகப் பயன்படுத்தும்போது, செல்களுக்கு புத்துயிர் கிடைக்கும். சரும சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் பெற முடியும். உப்பு ஸ்கிரப்பிங் செய்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் போது, உடலும், மனதும் புத்துணர்வு பெறும். தக்காளியுடன் கலந்து முகத்தில் தேய்க்கும் போது, முகம் பொலிவுடன் தோற்றமளிக்கும்.