
சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய 12-3-30 டிரெட்மில் பயிற்சி, எடை குறைக்க விரும்பும் பலருக்கும் சிறந்த தீர்வாக அமைந்துள்ளது. சமீபத்திய ஆய்வொன்று, இந்த பயிற்சி, சீரான ஓட்டத்தைவிட அதிக கொழுப்பை எரிக்கக்கூடியது என உறுதிப்படுத்துகிறது.

12-3-30 நடை பயிற்சி என்பது, டிரெட்மிலை 12% சாய்வாக வைத்து, மணிக்கு 3 மைல் வேகத்தில், 30 நிமிடங்கள் நடப்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த பயிற்சி, யூடியூபர் லாரன் ஜிரால்டோவால் 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின், உலகம் முழுவதும் பலர் இதைப் பின்பற்றத் தொடங்கினர்.
இந்த பயிற்சியை பற்றிய ஆய்வு, இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் எக்சர்சைஸ் சயின்ஸில் வெளியானது. இதில் 16 பேர் பங்கேற்றனர். அவர்கள் முதலில் 12% சாய்வில் 30 நிமிடங்கள் நடந்தனர். பின்னர், தங்களது வேகத்தில் ஓட்டினர். நடை பயிற்சி மேற்கொண்டவர்களில் 40% கலோரி கொழுப்பிலிருந்தே எரிந்தது. ஆனால் ஓட்டத்தில் அது 33% மட்டுமே இருந்தது.
இதனால், மேல்நோக்கி நடப்பது கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகிறது என தெரியவருகிறது. இது மட்டுமல்லாது, இதய ஆரோக்கியம் மற்றும் கால் தசை வலிமைக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
டிரெட்மில் இல்லாதவர்கள் இயற்கையான சாய்வு உள்ள பாதைகளில் நடக்கலாம். தட்டையான தரையில் நடப்பதைவிட சாய்வான இடங்களில் நடப்பது அதிக கலோரியை எரிக்க உதவும்.
மூட்டு வலி, கீழ் முதுகு பிரச்சனைகள் போன்றவை இருப்பின், இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு முன் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
உடல்நலத்தைப் பொருத்து தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சி மட்டுமே நீண்டகால மாற்றத்தை அளிக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தொடர்ச்சியாக இந்த பயிற்சியை மேற்கொண்டால் நல்ல பலன்கள் பெற முடியும்.