நடைமுறையில் எடை குறைக்க விரும்பும் அனைவரும் தங்களது உணவில் கட்டாயமாக சேர்க்க வேண்டிய ஒன்று நட்ஸ்கள். இதில் உள்ள நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், உடலில் பசியை கட்டுப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் முழுமை உணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, தினசரி உணவில் நட்ஸ்களை சிற்றுண்டியாகவோ, சாலட்டில் மேல் தூவியாகவோ அல்லது நட் பட்டராகவோ சேர்த்துக்கொள்ளலாம். இது மட்டும் இல்லாமல், நட்ஸ்கள் ஒட்டுமொத்த நலத்தையும் பாதுகாக்கும் திறனுடையவை என்பதனால், தினசரி உணவில் தவறாமல் இடம் பெற வேண்டும்.

இந்த நட்ஸ்களில், பாதாம் என்பது எடை குறைக்க உதவும் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. பாதாமில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம், இரண்டும் பசியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இதில் உள்ள எல்-அர்ஜினைன் என்ற அமினோ ஆசிட், உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்க உதவுவதோடு, தசை வளர்ச்சிக்கும் ஆதரவாக அமைகிறது. மேலும், பாதாமின் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக இருப்பதால், இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க உதவுகிறது.
இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இதனை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். நிபுணர்கள் பரிந்துரைக்கின்ற அளவாக, தினசரி 23 பாதாம் அல்லது 2 மேசைக்கரண்டி இயற்கை பாதாம் வெண்ணெய் போதுமானது. இதனை அதிகமாக எடுத்துக்கொண்டால், கூடுதல் கலோரி சேர வாய்ப்புள்ளது. எனவே, portion control முக்கியம். பாதாமை சாலட், ஓட்ஸ், ஆப்பிள் மீது தடவியும் அல்லது வறுத்து சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். இது சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.
தினமும் ஒரு சிறிய அளவு நட்ஸ்களை உட்கொள்வது நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் செல்கள் சேதத்தை தடுப்பதோடு, இதய நலத்தையும் மேம்படுத்தும். நட்ஸ்களில் உள்ள மோனோ மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நல்லவை. சாச்சுரேட்டட் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை தவிர்க்கும் முறையில் நட்ஸ்களை உணவில் சேர்ப்பது, எடை மேலாண்மை மட்டுமல்லாமல், முழுமையான நலவாழ்வையும் தரும்.