சென்னை: தென்னிந்தியாவில் அன்றாட சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தும் ஒர் பொதுவான பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலை உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுக்கும். இத்தகைய கறிவேப்பிலை ஆரோக்கியமானது என்பதை அனைவருமே அறிவோம்.
கறிவேப்பிலை உடலில் பல மாயங்களை செய்யக்கூடியது. நமக்கு தெரிந்தது எல்லாம் கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பது மட்டுமே. ஆனால் கறிவேப்பிலை உடலில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பழங்காலம் முதலா பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரியுமா? பழங்காலத்தில் கறிவேப்பிலையைக் கொண்டு டீ தயாரித்துக் குடிப்பார்களாம். உங்களுக்கு அந்த கறிவேப்பிலை டீயை எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா இதே செய்முறை உங்களுக்காக.
செய்முறை: முதலில் ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கறிவேப்பிலையை போட்டு, அரை மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
பின் அதை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். முக்கியமாக கறிவேப்பிலை டீயின் முழு பலனைப் பெற வேண்டுமானால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்போது கறிவேப்பிலை டீ குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.
உடலில் ப்ரீ-ராடிக்கல்கள் அதிகம் இருந்தால், அது புற்றுநோய் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. எனவே கறிவேப்பிலை டீயைக் குடிக்கும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ-ராடிக்கல்களால் உடல் செல்கள் சேதமடைமடைவதைத் தடுக்கின்றன.
கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். கறிவேப்பிலையானது இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்களைத் தூண்டிவிட்டு, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், மருத்துவரின் அனுமதியைப் பெற்று கறிவேப்பிலை டீயைக் குடிக்கலாம்.