இந்த தலைப்பு கொஞ்சம் அசூசையை ஏற்படுத்துகிறதா? நிச்சயம் இருக்காது என்றே நினைக்கிறோம். ஏனென்றால் உங்களுக்கு மலம் கழிப்பதில் பிரச்சனை இருந்தால், அது உங்கள் மனநிலையில் சிக்கலை ஏற்படுத்தும். மலம் கழிப்பது என்பது நமது உடலின் மிக அடிப்படையான செயல்பாடுகளில் ஒன்றாகும். இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. ஆனால் நாம் இதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்வதேயில்லை.
ஆனால் உங்கள் மலம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய விஷயங்களை கூறலாம். அதாவது அதன் நிறம், அமைப்பு மற்றும் எத்தனை முறை வெளியேறுகிறது என்பதைப் பொறுத்து உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்க முடியும்.. இப்போதுள்ள முக்கியமான கேள்வி: கட்டாயம் தினமும் மலம் கழிக்க வேண்டுமா?
அநேகமாக பலரின் மனதிலும் இந்த கேள்வி இருக்கும். ஆனால் யாரிடம் இதைப்பற்ற கேட்பது என தெரியாமல் இருப்பார்கள். இல்லை என்பதே இதற்குப் பதிலாகும். “தினமும் மலம் கழிப்பது சாதாரண விஷயம் என்றாலும், கண்டிப்பாக எல்லாருக்கும் இது அவசியமில்லை. சாதாரண குடல் இயக்கமானது ஒரு நாளைக்கு மூன்று முறை முதல் வாரத்திற்கு மூன்று தடவை வரை இருக்கும். எனவே நீங்கள் தினசரி மலம் கழிக்கிறீர்களோ அல்லது இரண்டு நாளுக்கு ஒருமுறை செல்கிறீர்களோ, ஒழுங்குமுறை முக்கியமானது” என்கிறார் டாக்டர் ஜிண்டால். தினசரி மலம் கழிக்கும் பழக்கம் மோசமானதல்ல என்றாலும், தினமும் கட்டாயம் மலம் கழிக்க வேண்டும் என்ற ஒரு கட்டுக்கதை நம்மிடையே நிலவி வருகிறது.
எச்சரிக்கை அறிகுறிகள் :
உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மலம் கழிக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றாலும், சில அறிகுறிகள் தென்பட்டால் அவசியம் மருத்துவரை சென்று சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
உதாரணமாக..
கருப்பு நிறத்தில் மலம்: மேல் இரைப்பைக் குழாயில் இரத்தப்போக்கு இருப்பதை இது குறிக்கலாம்.
பிரகாசமான சிவப்பு நிறம்: இது மூல நோய் அல்லது பெருங்குடல் புற்றுநோய் போன்ற கீழ் இரைப்பை குடலில் ஏற்பட்டுள்ள இரத்தப்போக்கின் அறிகுறியாக இருக்கலாம்.
வெளிர் அல்லது களிமண் நிற மலம்: கல்லீரல் அல்லது பித்த நாள பிரச்சனைகளைக் குறிக்கலாம்.
துர்நாற்றம் கொண்ட மலம்: இது கணைய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். உங்களையும் (உங்கள் மலத்தையும்) ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அதைப் பொறுத்தே உங்கள் ஆரோக்கியமும் இருக்கும். எனவே, நீங்கள் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், உங்கள் தட்டிலிருந்து முதலில் தொடங்கவும்.
ஆரோக்கியமான மலம் கழிக்க உதவும் சில விஷயங்கள்:
சீரான குடல் இயக்கங்களை ஆதரிக்கவும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும் நிறைய தண்ணீர் குடிக்கவும்
குடல் செயல்பாட்டைத் தூண்டுவதற்கு சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமுள்ள உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்கவும் தயிர் மற்றும் புளித்த உணவுகளில் காணப்படும் ப்ரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்
மன அழுத்தம் செரிமானத்தை பாதிக்கும் என்பதால் தியானம் அல்லது யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.