சென்னை: வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே அதிகப்படியான நற்பலன்கள் கொண்டவை. இது, காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. வீட்டில் சிறிய தொட்டியில்கூட இந்தக் கீரையை வளர்க்கலாம். நோய் தீர்க்கும் மூலிகையாகவும் உணவாகவும் சிறப்பாகச் செயல்படக்கூடியது.
‘தாவரவியல் வல்லுநர்களால் மிகப் பழமையான மருத்துவ தாவரங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது வெந்தயக் கீரை. வெந்தயக் கீரை நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. ஆயுர்வேதத்திலும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் இது குறித்த மேற்கோள்கள் உள்ளன.
வெந்தயக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டுவந்தால், மலம் இளகும். வெயில் காலத்தில் பலருக்கும் உடல் சூடு ஏற்படும். உஷ்ணத்தை தணித்து, உடலை குளிர்ச்சியடையச் செய்யும். வயிற்றுப் பிரச்சனைகள், உப்புசம், மந்தத்தன்மை, வாயுத்தொல்லை, இருமல், சுவையின்மை பிரச்னைகளைச் சரிசெய்யும். தயமின்கள், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் ஏ, பி6, கே மற்றும் சி போன்ற வைட்டமின்கள், செம்பு, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, செலினியம், துத்தநாகம், மாங்கனீஸ் போன்ற பல தாதுப்பொருட்கள் நிறைந்த அமுதமாக வெந்தயக்கீரை இருக்கிறது.
வெந்தயக்கீரையில் உள்ள பல்வேறு பைட்டோ நியூட்ரியன்டுகள் அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கு அடிப்படைக் காரணம். ஸ்டீராய்டுகள், அல்கலாய்டுகள், சபோனின், பாலிபினால்கள், ப்ளேவனாய்டுகள் போன்ற பைட்டோகெமிக்கல்கள் வெந்தயக் கீரையில் அதிகளவில் உள்ளன. உடல் உறுப்புகளில் ஏற்படும் உள்வீக்கம், வெளிவீக்கத்தைப் போக்கும். வெந்தயக்கீரையை அரைத்துக் வீக்கத்தின் மீது தடவினால், விரைந்து குணமாகும். தீப்புண்கள் மீது வைத்துக்கட்ட, காயம் ஆறும்.
வெந்தயக்கீரையை வேகவைத்துத் தேன் விட்டுக் கலந்து, அளவாகச் சாப்பிட்டுவந்தால், மலம் எளிதாக வெளியேறும்; நெஞ்சு வலி, இருமல், மூலம் மற்றும் செரிமானப் பாதையில் இருக்கும் புண்கள் குணமாகும்.வெந்தயக்கீரையுடன் சீமை அத்திபழத்தைச் சேர்த்து அரைத்து, கட்டிகளின் மீது பற்றுப் போட, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும். படை மீது பூசினால், விரைவில் சரியாகும். இந்தக் கீரையுடன், பாதாம் பருப்பு, கசகசா, கோதுமை நெய், பசு நெய், பால், சர்க்கரை சேர்த்து, களிபோல கிண்டி சாப்பிட்டுவந்தால், உடல் வலுவடையும்.
வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது. நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் நாட்டுக்கோழி முட்டை, தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர, இடுப்பு வலி நீங்கும்.