உடல் எடையை குறைக்கும் நோக்கத்துடன் பலர் தற்போது இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) என்ற முறையை பின்பற்றுகின்றனர். இது ஒரு ஆரோக்கியமான வழி எனினும், சில பொதுவான தவறுகள் இதன் பலனை முழுமையாகத் தராமல் தடுக்கும்.
இந்த முறையில் குறிப்பிட்ட நேரத்தில் உணவு எடுத்துக்கொண்டு, அதற்கு பின் நிர்ணயிக்கப்பட்ட நேரம் விரதமாக இருப்பதே அடிப்படை. இதனால் உடலின் மெட்டபாலிசம் சீராகி, இன்சுலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் கீழே குறிப்பிடப்பட்ட தவறுகளைச் செய்கிறீர்கள் என்றால், எடை குறையாமல் இருப்பதோடு, உடல் சோர்வும் ஏற்படலாம்.

முதல் தவறு – அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல்:
விரதத்திற்குப் பிறகு சாப்பிடும் நேரத்தில் “இப்போ தான் நேரம்” என எண்ணி அதிகம் சாப்பிடுவது வெயிட் லாஸை தடுக்கிறது. அதற்கு பதிலாக புரதச்சத்து, நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட உணவை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாவது தவறு – தண்ணீர் குடிக்காமல் இருப்பது:
விரதத்தில் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது தவறான நம்பிக்கை. உண்மையில், விரதத்தின்போது நீர் அருந்துவது அவசியம். தண்ணீர் குறைபாடு பசியை தூண்டி, உடலில் நீர் தங்கச் செய்யும்.
மூன்றாவது தவறு – ஜங்க் உணவுகள்:
விரதத்தை முடித்தவுடன் இனிப்புகள், பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் போன்றவற்றைச் சாப்பிடுவது வெயிட் லாஸை தாமதமாக்கும். அதற்கு பதிலாக முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் மெலிந்த புரதங்கள் சேர்த்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
நான்காவது தவறு – தூக்கம் குறைவு:
தரமான தூக்கம் இல்லையெனில் ஹார்மோன் சமநிலை குலைந்து, பசி அதிகரிக்கும். இதனால் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் பலன் குறையும்.
ஐந்தாவது தவறு – தொடர்ச்சியாக செய்யாமல் இருப்பது:
ஒரு சில நாட்கள் செய்துவிட்டு நிறுத்திவிட்டால் உடல் அதற்கேற்ப இயங்காது. தொடர்ச்சியாகவும் கட்டுப்பாடாகவும் இதை மேற்கொண்டால் தான் உடல் எடை குறையும்.