சென்னை: மல்லிகை பூவே… மல்லிகை பூவே பார்த்தாயா? உன்னிடம் மயங்காதவர் யார் என்று பார்த்தாயா? தேடிப்பார்த்தாலும் யாரும் இருக்க மாட்டார்கள்… இதன் வாசனை கிறங்கடிக்கும். மனதை கொள்ளைக் கொள்ளும். அற்புதமான வாசனை… இதன் வாசம் மனதை அமைதிப்படுத்தும் என்பதையும் தெரிஞ்சுக்கோங்க… இந்த மல்லிகைப்பூ மருத்துவ குணம் கொண்டதுங்கோ…
மல்லிகை பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலர். இந்தியா, தாய்லாந்து, இலங்கை என்று பல நாடுகளிலும் வளர்ந்து மணம் பரப்பும் அற்புத மலர். இதில் உள்ள மருத்துவ குணங்களை பார்ப்போம்.
உங்கள் வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு இருக்கா… அதன் அவஸ்தை தாங்க முடியாது. டாக்டரிடம் போகணும்னு நினைக்கிறீங்களா…
அதுக்கு முன்னாடி இதை செய்து பாருங்க… மல்லிகைப் பூக்கள் சிலவற்றை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்க… அப்புறமா… அதை வடிகட்டி குடித்து வந்தால் போதும். குடற்புழுக்கள் ஐயோ… அம்மா…ன்னு தானே வெளியேறிடும். இப்ப உங்க வயிறு க்ளீன்.
மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி நன்றாக பொடி செய்து, காலை, மாலை டீ சாப்பிடுவது போல் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் போதும். சிறுநீரகக் கற்கள் சிதறிடும். அப்புறம் என்ன மனசு ரிலாக்ஸோ… ரிலாக்ஸ்…
பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் நிலை மிகவும் பாவம்தான். சோர்வுடன் இருப்பார்கள். இந்த காலத்தில் சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதுமே… சோர்வு சொல்லிக்கொள்ளாம ஓடிடும்.
மல்லிகைப் பூவை ஒன்றே இரண்டோ தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்குமாம். சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.
மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதோடு பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்சி குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப்பூ சிறந்த மருந்தாகும் என்பதை தெரிஞ்சுக்கோங்க…
மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும். மல்லிகைப்பூவை நன்றாக அரைத்து உடலில் வீக்கமுள்ள இடங்களில் தடவி வந்தால் வீக்கம் குறையும். சொறி, சிரங்கு, நமைச்சல் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். இது தெரியுங்களா உங்களுக்கு!
மல்லிகையின் வேரை காயவைத்து பொடிசெய்து அதனுடன் வசம்புத் தூளை சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் பட்டென்று தெறித்துவிடும். சும்மா பள,பளன்னு தோல் மின்னும்.
மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்களே நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல்சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டதுதான் மல்லிகை பூ.