தூக்கம் என்பது குழந்தைகளுக்கான வளர்ச்சியில் முக்கியமான ஒரு கட்டமாகும். இதைப் பெறுவதற்கான சூழல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். ஆனால் சமீபத்திய ஒரு ஆய்வு, குழந்தைகள் தினமும் உறங்கும் மெத்தைகள் மற்றும் படுக்கை விரிப்புகள், அவர்களுடைய உடல்நலத்துக்கு ஆபத்தான நச்சு இரசாயனங்களை வெளியிடுகின்றன என்ற முடிவை காட்டியுள்ளது. இது பல பெற்றோருக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 6 மாதங்கள் முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் வாழும் 25 அறைகளின் காற்று தரம் பரிசோதிக்கப்பட்டது. பேராசிரியர் மிரியம் டயமண்ட் தலைமையிலான குழு, குழந்தைகள் உறங்கும் இடங்களைச் சுற்றியுள்ள காற்றில் தீவிரமான இரசாயனங்கள் இருப்பதைக் கண்டறிந்தது. இந்த இரசாயனங்களில் ஃபித்தலேட்ஸ், ஃபிளேம் ரிடார்ன்டன்ட்ஸ் மற்றும் UV ஃபில்டர்ஸ் என்பவை அடங்குகின்றன.
இவை பிளாஸ்டிக், மெமரி ஃபோம் மற்றும் சில வகை படுக்கை பொருட்களில் உபயோகிக்கப்படும் ரசாயனங்கள். குழந்தைகளின் உடல் வெப்பம் மற்றும் எடை குறைவாக இருப்பதால், அவர்கள் பயன்படுத்தும் மெத்தைகளிலிருந்து இந்த இரசாயனங்கள் அதிக அளவில் காற்றில் கலப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஃபித்தலேட்ஸ் எனப்படும் ரசாயனம் ஹார்மோன் சமநிலையை பாதிப்பதுடன், சீக்கிர பருவமடைதல், இனப்பெருக்க பிரச்சனைகள், நரம்பியல் சிக்கல்கள், ஆஸ்துமா, புற்றுநோய், உடல் பருமன் மற்றும் மூளை வளர்ச்சியில் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், ஃபிளேம் ரிடார்ன்டன்ட்ஸ் எனப்படும் ரசாயனங்கள், IQ குறைதல், வளர்ச்சிப் பாதிப்பு மற்றும் ஹார்மோன் சீர்கேடு போன்ற பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது. அதிர்ச்சியளிக்கும்படியாக, இந்த ரசாயனங்கள் கம்பனியின் பிராண்டு விலை வேறுபாடுகள் குறித்தின்றி, விலையுயர்ந்த மெத்தைகளிலும், மலிவானவற்றிலும் கூட காணப்படுகின்றன.
இதற்கு மாற்றாக, இயற்கையான காடன் பெட்கள் சிறந்த தேர்வாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். காடன் பெட்கள், ரசாயனங்கள் இல்லாமல் தயாரிக்கப்படுவதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன. அவை சுவாசிக்கக்கூடியதும், ஒவ்வாமை அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டதும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதுமானதும் ஆகும்.
இவை குறைந்த விலையில் கிடைக்கும் என்பதோடு, இயற்கையானதாக இருப்பதால், நீண்ட கால பயன்பாட்டில் சிறிது சேதம் ஏற்பட்டாலும், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. எனவே, உங்கள் குழந்தையின் மெத்தையை மாற்றும் முன், அதன் பாதுகாப்பு மற்றும் உள்ளிருக்கும் பொருட்கள் குறித்து ஆராய்ந்து, இயற்கையானதை தேர்வு செய்வது மிக முக்கியம்.
இப்போதைய சூழ்நிலையில், பாதுகாப்பான தூக்க சூழலை உருவாக்குவது பெற்றோர் அனைவருக்கும் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. குழந்தையின் சிறுவயதில் ஏற்படும் பாதிப்புகள், அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் என்பதால், மேல் கவனமாக இருக்க வேண்டியது நேரத்தின் தேவை.