சென்னை: கூந்தல் வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு வீட்டிலேயே நெல்லி பொடி செய்வதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பெரிய நெல்லிக்காய் – 10, கறிவேப்பிலை– ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயம் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – சிறிது.
நெல்லிக்காய்களை கழுவித் துடைத்து, கொட்டைகளை நீக்கிவிட்டு நன்கு காயவைக்கவும் (இதுதான் ‘நெல்லி முள்ளி’). எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயத்தைப் பொரியவிட்டு எடுக்கவும். பிறகு, அதே எண்ணெயில் மிளகாயையும் வதக்கி, பின் அடுப்பை அணைத்துவிட்டு, கறிவேப்பிலையை அந்த சூட்டிலேயே போட்டுப் புரட்டி எடுத்துக்கொள்ளவும்.
காய்ந்திருக்கும் நெல்லிமுள்ளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். பிறகு, மிளகாய், உப்பு, பெருங்காயத்தைப் போட்டு அரைத்து, கடைசியாக கறிவேப்பிலையையும் போட்டு அரைத்தெடுக்கவும்.
அருமையான வாசனையோடு இருக்கும் இந்தப் பொடியை, சூடான சாதத்தில் கலந்தோ அல்லது மோரில் கலக்கியோ சாப்பிடலாம். கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான நெல்லிக்காயும் கறிவேப்பிலையும் இணைந்திருப்பதால், கருகரு கூந்தலுக்கு இது சரியான வழியாகும். உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும். இளநரையையும் போக்கும்.