சீஸ் என்பது சுவையிலும், சத்திலும் வளமான ஒரு உணவுப்பொருள். இது புரதம் மற்றும் முக்கியமான தாதுக்கள் நிறைந்த உணவாகவும், பலருக்கு பிடித்த தின்பண்டமாகவும் உள்ளது. பழங்கள் அல்லது முழுதானிய உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது, இது நார்ச்சத்து மற்றும் சுவையை கூடுதலாக வழங்குகிறது. உடலுக்கு கால்சியம், வைட்டமின் A, B12, சிங்க் உள்ளிட்ட முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்கும் சீஸ், எலும்பு, இதயம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கிறது.

ஆனால், அளவுக்கு அதிகமாக சீஸ் சாப்பிடும் போது, சில உடல்நலக்கேடுகள் உண்டாகலாம். பொதுவாக, சீஸில் உள்ள லாக்டோஸ் என்ற சர்க்கரையை சிலரது உடல் ஜீரணிக்க முடியாமல் போகிறது. இது, வயிற்றுப்போக்கு, வாயு மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். இவ்வாறான அறிகுறிகள், சீஸ் சாப்பிட்ட 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரத்திற்குள் ஏற்படலாம்.
மேலும், சீஸில் அதிக கலோரிகள் இருப்பதால், நீண்ட நேரம் உடல் இயக்கமின்றி இருந்தால் எடை அதிகரிக்கும். உங்கள் உணவில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில் எடை உயரும் போது, அதற்கு சீஸ் காரணமாக இருக்கலாம். சீஸில் அதிகமாக உள்ள சோடியம், உங்கள் ரத்த அழுத்தத்தை உயர்த்துவதுடன், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றிற்கும் வழிவகுக்கலாம். மேலும், சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகள் கூடும்.
சீஸ் அதிகம் சாப்பிடும் சிலருக்கு முகப்பரு, எண்ணெய் தோல் மற்றும் சரும அடைப்பு ஏற்படலாம். சில நேரங்களில், தடிப்புகள் அல்லது எக்ஸிமா போன்ற தோல் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், டைரி உணவுகள் சிலருக்கு மூட்டு வலி அல்லது வீக்கத்தைத் தூண்டக்கூடும். இது, சீஸில் உள்ள “கேசின்” என்ற புரதத்துக்கு எதிராக உடல் காட்டும் உளறலாக இருக்கலாம்.
இந்த வகையான அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால், உடனே உங்களுடைய சீஸ் உட்கொள்ளும் அளவை பரிசீலிக்க வேண்டும். மிகவும் சத்தான உணவாக இருந்தாலும், சீஸ் அளவோடு மட்டுமே சாப்பிடப்பட வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் பரிந்துரை. அந்த அளவை மீறும்போது, உடல் நமக்குத் தேவைப்பட்டு இந்த எச்சரிக்கைகளை உணர்த்துகிறது.
உடல்நலத்தைக் காக்கும் வகையில், உங்கள் உணவில் உள்ள எல்லா பொருட்களையும் சீராகவும், பொறுப்போடு பயன்படுத்த வேண்டும் என்பதே முக்கியமாகும்.