நல்ல பழக்கவழக்கங்களின் விளைவாக நமக்கு கிடைப்பதே நல்ல உடல் ஆரோக்கியம். அந்த வகையில் உணவு சாப்பிட்ட பிறகு வரக்கூடிய ஏப்பமானது வயிறு நிறைந்ததற்கான அறிகுறி என்று ஒரு சில மக்கள் நம்புகின்றனர். ஆனால் நிபுணர்கள் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. உணவுக்குப் பிறகு ஏப்பம் வருவது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால் அளவுக்கு அதிகமான ஏப்பம் வரும்பொழுது அது செரிமான பிரச்சனைகளின் அறிகுறியாக கருதப்பட வேண்டும். ஒரு வேலை உங்களுக்கு அடிக்கடி ஏப்பம் வருகிறது என்றால் நீங்கள் பின்பற்ற வேண்டிய நிபுணர்கள் அங்கீகரித்த ஒரு சில நடைமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அடிக்கடி ஏப்பம் வருவது என்பது நமக்கு அசௌகரிமானதாக இருப்பதோடு வெளியில் இதே மாதிரியான நிகழ்வு நடைபெறுவது நமக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். வயிற்றில் சேமிக்கப்பட்ட காற்று வாய் வழியாக வெளியேற்றப்படும் செயல்முறை ஏப்பம் எனப்படுகிறது. அதிகப்படியான காற்றை நீங்கள் விழுங்கியதன் காரணமாகவே இது ஏற்படுகிறது.
ஏப்பம் வருவதற்கான சில பொதுவான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்: உணவு பழக்க வழக்கங்கள்: கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை நாம் விரைவாக பருகும் பொழுதோ அல்லது வாயை திறந்தபடி பருகும் பொழுதோ அந்த சமயத்தில் அதிகப்படியான காற்றை உள்ளிழுக்குறோம். இது மாதிரியான பழக்கங்களை நீங்கள் குறைக்கும் பொழுது ஏப்பமும் குறிப்பிடத்தக்க வகையில் குறைவதை நீங்கள் காணலாம். மேலும் பீன்ஸ், பருப்பு வகைகள், முட்டைகோஸ் மற்றும் வெங்காயம் போன்றவை வாயு அதிகரிப்பை ஏற்படுத்தும் சில உணவுகள். கேஸ்ட்ரோ ஈசோபேஜியல் ரிஃப்லெக்ஸ் திசீஸ் (GERD), கேஸ்ட்ரிட்டிஸ் மற்றும் இரிட்டபுள் பவல் சின்ட்ரோம் (IBS) போன்ற உடல் நலக் கோளாறுகள் அதிகப்படியான ஏப்பத்தை ஏற்படுத்தக் கூடியவை.
உணவு மாற்றங்கள் செய்த பிறகும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத பட்சத்தில், உடனடியாக நீங்கள் அதிகப்படியான ஏப்பத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து அதற்கு தகுந்த சிகிச்சை பெற வேண்டும். சுவிங் கம் மெல்லுதல், புகைபிடித்தல் மற்றும் பதட்டம் போன்றவை அதிகப்படியான காற்றை விழுங்குவதற்கு வழிவகுக்கலாம். இது மாதிரியான விஷயங்களை குறைப்பது ஏப்பத்தை குறைப்பதற்கு உதவும். எந்தெந்த உணவு சாப்பிடும் பொழுது அதிகப்படியாக ஏப்பம் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து ஏப்பத்தை தூண்டக்கூடிய உணவுகள் சம்பந்தப்பட்ட ஒரு உணவு டைரியை பின்பற்றவும். பின்னர் அது மாதிரியான உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்கவோ அல்லது முடிந்த அளவு குறைக்கவோ நீங்கள் முயற்சி செய்யலாம். எப்போதும் சிறிய அளவிலான உணவை, அடிக்கடி சாப்பிடுவதற்கு நீங்கள் முயற்சி செய்யலாம் அதேபோல உணவை நன்கு மென்று கூழாக்கி விழுங்கவும், சாப்பிடும் பொழுது வாயை மூடி உணவை மெல்லவும். பல்வேறு மாற்றங்களை செய்த பிறகும் அதிகப்படியான ஏப்பத்தை அனுபவிக்கிறீர்கள் என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.
இதற்கு பின்னணியில் உள்ள காரணத்தை கண்டுபிடிப்பதற்கு எண்டோஸ்கோபி அல்லது pH கண்காணித்தல் போன்றவை பரிந்துரைக்கப்படலாம். இந்த யுக்திகளை பின்பற்றுவதன் மூலமாக அதிகப்படியான ஏப்பத்தை உங்களால் சமாளிக்கவும் குறைக்கவும் முடியும்.