ஒரு வாரத்திற்கு ஒரு நாள் “சீட் மீல்” சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பது இன்று ஆரோக்கியப் பராமரிப்பில் பெரும் கேள்வியாக உள்ளது. ஆரோக்கிய உணவை பின்பற்றுவோர் வாரம் ஆறு நாட்கள் முறையாக உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து, ஏழாவது நாளில் சாப்பிடும் “சீட் மீல்” வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். ஆனால், இது உண்மையில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று விவாதிக்கப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள அபோலோ மருத்துவமனையின் சீனியர் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார் தனது X பக்கத்தில் இதுபற்றி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

டாக்டர் குமார் விளக்குவது போல, நல்ல ஆரோக்கியம் கொண்ட நபர்கள் வாரத்திற்கு ஒரு முறை சீட் மீல் எடுத்தாலும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அந்த நாளில் அதிகமாக ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்தால், அடுத்த வாரம் முழுவதும் அதன் தாக்கம் தொடரக்கூடும். குறிப்பாக டயாபடீஸ், உடற்பருமன் அல்லது இதய நோய் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு நாள் சீட் மீல் கூட உடல்நலத்திற்கு ஆபத்தானதாக இருக்கும். டயாபடீஸ் நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை நிலை மாறும், உடல் பருமன் கொண்டவர்களுக்கு கூடுதல் கலோரிகள் சேர்ந்து எடை அதிகரிக்கும், இதய நோய் உள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என டாக்டர் குமார் எச்சரிக்கிறார்.
சீட் மீல் எடுத்துக்கொள்ளும்போது அளவில் கவனம் செலுத்துவது முக்கியம். சிறிய அளவிலான இனிப்பு அல்லது தின்பண்டங்களை தேர்வு செய்யலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு பதிலாக பேக் செய்யப்பட்ட மற்றும் குறைந்த சர்க்கரை உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மெதுவாக சாப்பிடுவதும், திருப்தியாக உணரும்போது நிறுத்துவதும் நல்ல வழிமுறையாகும். இதனால் ஆரோக்கியத்தை பாதிக்காமல், மனதையும் உடலையும் திருப்திப்படுத்த முடியும்.
என்றைக்காவது ஒரு நாள், மிதமான அளவில் சீட் மீல் எடுத்துக் கொள்வது பெரும்பாலும் பாதுகாப்பானது. ஆனால் ஏற்கனவே உடல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது கூட உடல்நலத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, அவர்களுக்கு வேறு ஆரோக்கியமான மாற்று உணவுகளை தேர்வு செய்யவும், சிறிய அளவுகளில் பராமரிக்கவும் டாக்டர் குமார் பரிந்துரைக்கிறார். இதன் மூலம் வாராந்திர ஆரோக்கிய பழக்கவழக்கத்துடன் இணைந்து, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.