புதுடெல்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும், பயங்கரவாதத்துக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை தொடர்பான மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றும், போரை நாடவில்லை என்றும் கூறினார். அதே நேரத்தில், அமைதியை பலவீனமாக கருதக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இந்தியா எந்த நாட்டின் நிலத்தையும் கைப்பற்ற விரும்பவில்லை என்றும், மற்ற நாடுகளை அச்சுறுத்தும் நோக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருக்க முடியாது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தேசிய நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் இந்தியா ஏற்காது என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்புத்துறையில் தற்சார்பு முக்கியமானது என குறிப்பிட்ட அவர், சிப்கள் முதல் கப்பல்கள், ஆயுதங்கள் வரை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்க வேண்டும் என்றார்.
போரின் தன்மை வேகமாக மாறி வருவதாகவும், எதிர்கால போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள், ரோபோடிக்ஸ், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய இளைஞர்கள் இந்தத் துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், எதிர்கால பாதுகாப்பு தேவைகளுக்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 2025–26-ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.38,424 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், 2029-ம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
