மதுரை: கள்ளக்குறிச்சி கள்ளசாராயத்தை கண்டித்து, தமிழக அரசைக் கண்டித்து, மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே ஜூன் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. காவல் துறையிடம் அனுமதி கோரியுள்ளது.
ஆனால் காவல் துறை அனுமதி வழங்கவில்லை. ஆனால், திட்டமிட்டபடி கடந்த 22-ம் தேதி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர்.
அப்போது, போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இந்த வழக்கில் தடையை மீறி பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எச்.ராஜா, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன், மாநில நிர்வாகிகள் உள்பட 129 பேர் மீது தல்லாகுளம் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.